11 பிப்ரவரி, 2012

அப்ரோஸ்:செல்வமே!





நடுவர் அவர்களே ஒரு அழகான பாட்டோட ஆரம்பிக்கட்டுமா?


பணம் கொடுத்தாரே பக்கீர் முஹம்மது உண்மையா இல்லையா? 
நாங்கள் தேசத்துரோகிகளா? மற்றவரெல்லாம் தியாகிகளா? 
பதில் சொல்லிடு பட்டிமன்றமே பணத்தால் விடுதலை கிடைத்ததா இல்லையா? நாட்டின் விடுதலைக்கு நாங்கள் கொடுத்ததில் பணமும் இருந்தது உண்மையா இல்லையா?
அருமையானவர்களே! அன்று சுதேசிக் கப்பல் வாங்குவதற்கு வ.உ.சி. அவர்கள் பணமில்லாமல் தவித்துக் கொண்டிருந்தபோது ஹாஜி பக்கீர் முஹம்மது அள்ளிக் கொடுத்தாரே அன்றைய மதிப்பிற்கே இரண்டு லட்சம் ரூபாய் என்றால் இன்ரு அதன் மதிப்பென்ன? கொஞ்சமும் தயங்காமல் குறைவின்றிக் கொடுத்து கப்பலை வாங்கி நாட்டுக்கு அர்பணித்து இந்த நாட்டின் மானம் கப்பல் ஏறிவிடாமல் காப்பாற்றியவர்  ஹாஜி பக்கீர் முஹம்மது. அவரின் பரம்பரையிலே வந்த பாசமலர்கள் நாங்கள். அதனால்தான் செல்வத்தின் பெருமையை அள்ளிவிட வந்துள்ளோம். அள்ளிவிடலாமா?


நடுவர் அவர்களே! நம்ம பீமா வந்தாக.. நாக்கு தெறிக்க சொன்னாக.என்ன சொன்னாக? பணம் பாடாப் படுத்துது.. பணம் பாடாப் படுத்துது.. 
ஏம்மா பாடாப் படுத்துது? ஆடத்தெரியாதவளுக்கு தெருக்கோணலாம்.. அந்த கதையாவுல இருக்கு! முறையாப் பயன்படுத்துணா பணம் எப்படி  பாடாப் படுத்தும்? செல்வத்தை சேமித்து சீராக செலவழித்து முறையாக பயன்படுத்தியவர்களெல்லாம் வெற்றி காணவில்லையா? எத்தனை பேரைக் காட்டவேண்டும்?


அன்னை கதீஜா ரலியல்லாஹு அன்ஹா! ஒரு செல்வச் சீமாட்டி. அவர்களின் திரண்ட செல்வமெல்லாம் இந்த மார்க்கத்தின் வளர்ச்சிக்கு பயன்படவில்லையா? அறவழியிலே அவர்கள் அள்ளிக் கொடுத்ததால்தான் அல்லாஹ்வே அவர்களுக்கு சலாம் சொல்லி அனுப்பினான். யாருக்கு கிடக்கும் இந்த பாக்கியம்? அல்லாஹ்வின் பாதயிலே அள்ளிக் கொடுத்தால் அல்லாஹ்வின் சலாமும் கிடைக்கும்; அகில மக்களின் அன்பும் கிடைக்கும்.


கொடைவள்ளல் ஜமால் முஹம்மது! திருச்சியிலே இவரது பெயரில் ஒரு கல்லூரியே உண்டு.வரலாற்றிலும் இவருக்கு உயர்ந்த இடம் உண்டு. காரணம் என்ன தெரியுமா? பல ஏக்கர் பரப்பளவுள்ள நிலத்தை கல்லூரி கட்ட கொடுத்ததோடு மட்டுமல்லாமல் ஏழை மாணவர்களுக்கு ஏராளமாய் உதவினார். இன்று கல்வி கல்வி என்று கத்துகிறீர்களே..அந்த கல்விக்கு அந்த பகுதியிலே உயிர் கொடுத்தவரே அவர்தான். அவரது பணம்தான் பலபேரைப் பட்டதாரியாக்கியது. இன்று ஒப்பிலான் மக்கள் எவ்வாறு கல்விக்காக கல்வி கற்கும் மாணவர்களுக்காக பல லட்சம் செலவழித்து இந்த போட்டிகளை நடத்தி நம்மை ஊக்கப்படுத்துகிறார்களோ அதுபோல கொடைவள்ளல் ஜமால் முஹம்மது மாணவர்களின் அறிவுத் திறனுக்காக ஆயிரக் கணக்கில் அள்ளி வழங்கியவர்.அதனாலே அவருக்கு மக்களின் உள்ளத்தில் உயர்ந்த மதிப்பும் கிடைத்தது இன்ஷாஅல்லாஹ் மறுமையிலும் அவருக்கு உயர்ந்த சுவனத்திலே ஓர் இடம் இருக்கலாம். இதற்கெல்லாம் என்ன காரணம்? அறவழியிலே அவர் அள்ளிக் கொடுத்ததுதான். அவர் இவர்களைப் போல் பணமில்லாமல் பக்கீர்ஸாவாக இருந்திருந்தால் இதையெல்லாம் செய்திருக்கமுடியுமா? வரலாற்றிலே இடம்பிடித்திருக்கமுடியுமா?


அறிஞர் பெர்னாட்ஷாவிடம் கேட்கப்பட்டது: பணத்தைப் பற்றி உங்கள் கருத்தென்ன? அவர் அழகாகச் சொன்னார்: பலர் பணத்தை தவறாக நினைக்கிறார்கள்.அதனால்தான் ஏழையாக இருக்கிறார்கள்.


செல்வம் என்பது வெறும் பொருளல்ல; அது அல்லாஹ்வின் அருளாகவும் இருக்கிறது. அல்லாஹ் கூறுகிறான்:


''ஜும்ஆதொழுகை முடிந்துவிட்டால் பூமியிலே பரவிச் சென்று அல்லாஹ்வின் அருளைத் தேடுங்கள்''. இந்த வசனத்தில் பொருள் தேடுவதைக்கூட அருள்தேடுவதாக அல்லாஹ் கூறுகிறான் அப்படியானால் செல்வத்திற்கு அல்லாஹ்வே அங்கீகாரம் கொடுத்துவிட்டபிறகு இவர்கள் என்ன அதை மறுத்துப் பேசுவது? நடுவர் அவர்களே! நீங்கள் இறைவன் கட்சியா அல்லது இவர்கள் கட்சியா? நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்.


எனக்கு முன் பேசிய தோழி சொன்னார்: படித்தால்தான் முன்னுக்கு வரமுடியும் என்று. யார் சொன்னது? படிக்காத மேதைகள் எத்தனை பேரைக் காட்டவேண்டும்? 


குறுகிய காலத்திலே கோடீஸ்வரராகி வரலாற்றில் இடம்பிடித்தவர் கோடிச்செல்வர் ஆண்ட்ரூ கார்னீஜி. அவரிடம் பலபேர் கேட்டார்கள்: தங்களுடைய வெற்றியின் இரகசியம் என்ன? அதற்கு அவர் சொன்ன வார்த்தை என்ன தெரியுமா? வெற்றியின் உண்மையான இரகசியம் சீராக செலவழித்து சேமிப்பதுதான். சேமிப்பு என்பது ஒரு மனிதனுக்கு இக்கட்டான நேரத்திலும் உதவுகிறா உற்ற நண்பன் என்றார். அவர் சொன்னது எவ்வளவு பெரிய உண்மை.


எதிரணியைப் பார்த்து ஒரு கேள்வி கேட்கிறேன்: பணம் இல்லையென்றால் உங்கள் பெற்றோர் உங்களை இந்தளவு ஆளாக்கியிருக்கமுடியுமா? பணம் செலவழிக்காமல்  இந்தளவு நீங்கள் படித்திருக்கமுடியுமா? அல்லது இந்த பட்டிமன்றத்தில் பேசியிருக்க முடியுமா? ஆக உங்கள் கல்விக்கே காரணமாக இருப்பது இந்த செல்வம்தான். அதைக் குறைத்துப் பேசலாமா? ஏறிவந்த ஏணியை எட்டி உதைக்கலாமா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்

முக்கியப் பதிவுகள்

உங்கள் வாழ்க்கையை புரட்டிப் போடும் வெற்றியின் ரகசியங்கள் Part - 2

உங்கள் வாழ்க்கையை புரட்டிப் போடும் வெற்றியின் ரகசியங்கள்  part 2 தனித்து இயங்குவதை விட கூட்டு முயற்சி  Team Work நல்ல பலனையும் வெற்றியையும் ...